அதிமுக எம்.பி-க்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை 13 வது நாளாக ஒத்திவைப்பு


அதிமுக எம்.பி-க்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை 13 வது நாளாக ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 March 2018 6:47 AM GMT (Updated: 21 March 2018 6:47 AM GMT)

அதிமுக, தி.மு.க. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்களின் தொடர் அமளியால் 13-வது நாளாக மாநிலங்களவை முடங்கி உள்ளது. #LokSabha #AIADMKMPs #BudgetSession

புதுடெல்லி, 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2–வது கட்ட அமர்வு 5–ந் தேதி தொடங்கியது. காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அமளியால் தொடர்ந்து எந்த அலுவல்களும் நடைபெறாமல் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மக்களவை நேற்று கூடியபோது ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேச எழுந்தார். ஆனால் அவரை பேச விடாமல் வங்கி மோசடி தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சியினரும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சியினரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினரும் அமளியில் ஈடுபட்டனர்.

 எம்.பி.க்கள் அமளியால் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறி அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இதே நிலை தான் நீடித்தது. அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோ‌ஷமிட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி எம்.பி. குலாம் நபி ஆசாத் எழுந்து பேசுகையில், வங்கி மோசடி விவகாரம், காவிரி பிரச்சினை, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த அவை சுமுகமாக நடைபெறும், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.

பல்வேறு கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 12–வது  நாளாக நேற்று முடங்கியது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானமும் 3–வது நாளாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இன்று காலை பாராளுமன்றம் கூடியதும்  இரு அவைகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் 13-வது நாளாக மாநிலங்களவை முடங்கி உள்ளது. 

Next Story