இந்து மல்கோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


இந்து மல்கோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 26 April 2018 11:53 AM GMT (Updated: 26 April 2018 11:53 AM GMT)

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இந்து மல்கோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. #InduMalhotra #SupremeCourt

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி ஜோசப் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க சட்டத்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய கொலிஜீயம் குழு, காலியாக உள்ள நீதிபதிகள் காலியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இதில் தேர்வான ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா(61) ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்குமாறு, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை சட்ட அமைச்சகமும், ஜனாதிபதியும் ஏற்று கொண்டனர். 

அதே நேரத்தில் ஜோசப் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. ஜோசப் நியமனம் குறித்த பரிந்துரையை திருப்பி அனுப்பி மத்திய அரசு கூறியுள்ளதாவது: -

சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அல்லது நீதிபதிகள் குழு , சரியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஜோசப் தேர்வு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். தகுதி, சீனியாரிட்டி மற்றும் நியாயமான பிரதிநிதித்துவம் அடிப்படையில் ஜோசப்பை பரிந்துரையை ஏற்கவில்லை எனக் கூறியுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் கூறுகையில், அடக்குமுறைக்கு எதிராக நீதித்துறை குரல் எழுப்பாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்றார்.

2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவைச் சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளால் மக்கள் மத்தியில் நீதித்துறை மேல் பல கேள்விகள் முளைத்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எப்படி கையாள போகிறார் என்பது தெரியவில்லை. 

இதற்கிடையே இந்து மல்கோத்ரா நியமனத்தையும் நிறுத்திவைக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சார்பில் இன்று தாக்கல் செய்த மனு மீது 
மல்கோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்  மறுத்து விட்டது.

Next Story