பதிலுக்கு பதில் நடவடிக்கை, பாகிஸ்தான் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாட்டை கொண்டு வருகிறது


பதிலுக்கு பதில் நடவடிக்கை, பாகிஸ்தான் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாட்டை கொண்டு வருகிறது
x
தினத்தந்தி 11 May 2018 9:23 AM GMT (Updated: 11 May 2018 9:23 AM GMT)

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாட்டை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்து உள்ளது. #Pakistan #USDiplomats


இஸ்லாமாபாத்,

 டொனால்டு டிரம்ப் ஆட்சி அமைந்த பின்னர் அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் பல்வேறு நிலைகளில் விரிசல் காணப்படுகிறது.

பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உதவியை நிறுத்தியது, பாதுகாப்பு விவகாரத்தில் கணிசமான நகர்வு என அமெரிக்கா நடவடிக்கையை எடுக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதில் நட்பு நாடுகள் என கூறிவந்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே விரிசல் அதிகரித்து காணப்படும் நிலையில் அமெரிக்காவில் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. அதாவது தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அங்கிருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவு தவிர்த்து வேறு எங்கேயும் செல்வதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் மற்றும் பிற நகரங்களில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட உள்ளது, அனுமதியில்லாமல் அவர்கள் பயணம் மேற்கொள்ள முடியாது என பாகிஸ்தானின் ‘டான்’ செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது. 

இந்நிலையில் பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தானும் நடவடிக்கையை எடுக்கிறது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி நகரங்களில் அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது, அதற்கான நகர்வில் பாகிஸ்தான் அரசு உள்ளது என ‘டான்’ செய்தி வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள பழங்குடியின பகுதிகள் மற்றும் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸை சேர்ந்த டொனால்டு நோர்க்ரோஸ் பேசுகையில்,  “இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது முக்கியமானது, நாம் கட்டுப்பாடுகளை விதித்தால், பேச்சுவார்த்தையை தடுக்கும். தூதரக அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு என்பது சரியான விஷயமாக இருக்காது என நான் நினைக்கிறேன்,” என கூறிஉள்ளார். 

Next Story