பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கர்நாடகத்தில் இன்று சட்டசபை தேர்தல்: ஆட்சியை பிடிப்பது யார்?


பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கர்நாடகத்தில் இன்று சட்டசபை தேர்தல்: ஆட்சியை பிடிப்பது யார்?
x
தினத்தந்தி 12 May 2018 12:30 AM GMT (Updated: 11 May 2018 10:31 PM GMT)

கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு, 

கர்நாடகத்தில், முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதை யொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியதால் ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் வருகிற 28–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீதம் உள்ள 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தென் மாநிலங்களில் முதன்முதலாக கர்நாடகத்தில்தான் பாரதீய ஜனதா காலூன்றியது. கடந்த 2008–ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று முதன்முதலாக ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2013–ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து, காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. பின்னர் 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 17 தொகுதிகளை கைப்பற்றி பாரதீய ஜனதா மீண்டும் தனது பலத்தை உறுதி செய்தது.

இந்தியாவில் தற்போது கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இதில் கர்நாடகம் மட்டுமே பெரிய மாநிலம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அதேசமயம், காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்து தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் பாரதீய ஜனதா உள்ளது. இதனால் இரு கட்சிகளுமே மிகுந்த பதற்றத்தில் உள்ளன.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பலமுறை சூறாவளி பிரசாரம் செய்தார். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்–மந்திரி சித்தராமையா ஆகியோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

222 தொகுதிகளிலும் சுமார் 2600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1½ லட்சம் மாநில போலீசாருடன் 50 ஆயிரம் மத்திய படை போலீஸ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதுதவிர துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஓட்டுப்பதிவை ‘வெப் கேமரா’ மூலம் படம் பிடிக்கவும், அதை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது அன்று தெரிந்துவிடும். 

இதுவரை நடைபெற்ற கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும் தெரியவந்து உள்ளது. என்றாலும் 15–ந் தேதி தெளிவான முடிவு தெரிந்துவிடும்.

Next Story