கருத்து கணிப்புகள் 2 நாட்களுக்கு பொழுதுபோக்கு வி‌ஷயமாக இருக்கும் - சித்தராமையா கருத்து


கருத்து கணிப்புகள் 2 நாட்களுக்கு பொழுதுபோக்கு வி‌ஷயமாக இருக்கும் - சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 13 May 2018 11:18 AM GMT (Updated: 13 May 2018 11:18 AM GMT)

கருத்து கணிப்புகள் 2 நாட்களுக்கு பொழுதுபோக்கு வி‌ஷயமாக இருக்கும் என சித்தராமையா கூறிஉள்ளார். #Siddaramaiah


பெங்களூரு,


224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் காரணமாக பெங்களூரு ஜெயநகர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாலும், போலி அடையாள அட்டை பிரச்சினை காரணமாக ராஜராஜேஸ்வரி தொகுதியின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாலும் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் பலப்பரீட்சை நிலவுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுவதால், இங்கு ஆட்சியை கைப்பற்றுவதில் அந்த இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளன.

கருத்து கணிப்பு முடிவுகள் 

இதற்கிடையே நேற்று ஓட்டுப்போட்டு விட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பரபரப்பான முடிவுகள் வெளியாயின.

டைம்ஸ் நவ் டி.வி.–வி.எம்.ஆர். சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 80 முதல் 93 இடங்களும், காங்கிரசுக்கு 90 முதல் 103 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 31 முதல் 39 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

இந்தியா டுடே டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 79 முதல் 92 இடங்களும், காங்கிரசுக்கு 106 முதல் 118 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 22 முதல் 30 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து இருக்கிறது.

சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 97 முதல் 109 இடங்களும், காங்கிரசுக்கு 87 முதல் 99 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 21 முதல் 30 இடங்களும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ்–சி.என்.எக்ஸ். சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 102 முதல் 110 இடங்களும், காங்கிரசுக்கு 76 முதல் 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 35 முதல் 37 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து உள்ளது.

ரிபப்ளிக் டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 95 முதல் 114 இடங்களும், காங்கிரசுக்கு 72 முதல் 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 32 முதல் 43 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

என்.டி.டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் தலா 94 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்து இருக்கிறது.

நாளை(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கருத்து கணிப்புகள் 2 நாட்களுக்கு பொழுதுபோக்கு வி‌ஷயமாக இருக்கும் என சித்தராமையா கூறிஉள்ளார். 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், ‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அடுத்த 2 நாட்களுக்கு பொழுதுபோக்கு வி‌ஷயமாக இருக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்புவது என்பது ஒரு ஆற்றின் சராசரியான ஆழம் நான்கு அடியாக இருக்கும் என்று புள்ளியியலாளர் கூறியதை நம்பி நீச்சல் தெரியாதவர் அதில் இறங்குவது போன்றது. 6+4+2 அடிகளாக இருந்தால்தான் சராசரி 4 அடியாக இருக்கும். எனவே 6வது அடி வரும்போது மூழ்க வேண்டியதுதான். அன்புக்குரிய கட்சித் தொண்டர்களே ஆதரவாளர்களே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கவலைப்படாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள், வார இறுதி விடுமுறையை குடும்பத்துடன் மகிழ்சியுடன் கொண்டாடுங்கள். நாம் மீண்டும் ஆட்சியைப்பிடிப்போம்,” என கூறிஉள்ளார்.  



Next Story