எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன்தான் உள்ளார்கள், யாரும் மாயமாகவில்லை - காங்கிரஸ்


எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன்தான் உள்ளார்கள், யாரும் மாயமாகவில்லை - காங்கிரஸ்
x
தினத்தந்தி 16 May 2018 9:31 AM GMT (Updated: 16 May 2018 9:31 AM GMT)

எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன்தான் உள்ளார்கள், யாரும் மாயமாகவில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. #KarnatakaElections2018 #Congress

பெங்களூரு, 

சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.

104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவும், காங்கிரஸ் (78 தொகுதிகள்) ஜனதா தளம்(எஸ்) (38 தொகுதிகள்) கூட்டணியும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கலந்துக்கொள்ளவில்லை. அவர்கள் மாயமாகிவிட்டார்கள் என தகவல்கள் வெளியாகியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 10க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியது. இப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் இத்தகவல் மறுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பிராந்திய தலைவர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்களுடன்தான் உள்ளோர்கள். பிதாரில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்ததன் காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள் காலதாமதமாக வந்தார்கள்,” என கூறிஉள்ளார். 

ஆளுநர் ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு விடுப்பார்கள் என்பது தொடர்பாக சஸ்பென்ஸ் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதாவிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story