கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் மாளிகை புறப்பட்டார் எடியூரப்பா: தொண்டர்கள் கொண்டாட்டம்


கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் மாளிகை புறப்பட்டார் எடியூரப்பா: தொண்டர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 May 2018 3:01 AM GMT (Updated: 17 May 2018 3:01 AM GMT)

கர்நாடக முதல்வராக பதவியேற்க எடியூரப்பா ஆளுநர் மாளிகை புறப்பட்டார். ஆளுநர் மாளிகை முன்பு திரண்டுள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு,

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ்  முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா எந்த வித சிக்கலும் இன்றி முதல் அமைச்சராக  பதவியேற்க வழி கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்காக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடியூரப்பா புறப்பட்டார். ஆளுநர் மாளிகை முன்பு குவிந்துள்ள பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story