காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் - எடியூரப்பா வேதனை


காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் - எடியூரப்பா வேதனை
x
தினத்தந்தி 17 May 2018 12:58 PM GMT (Updated: 17 May 2018 12:58 PM GMT)

காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர் என எடியூரப்பா குற்றம் சாட்டிஉள்ளார். #BSYedyurappa

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12–ந்தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 15–ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அவசர, அவசரமாக ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அதேபோல, தாங்கள் தனிபெரும் கட்சியாக உள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு எடியூரப்பாவும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்–மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கி உள்ளது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது.

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி நடவடிக்கையை எடுத்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு அருகே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இப்போது எடியூரப்பா ஆட்சி அமைத்து உள்ளநிலையில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டு, விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டிஉள்ளார். 


Next Story