பா.ஜனதா குதிரைபேர ஆடியோ போலியானது - எம்.எல்.ஏ. மறுப்பால் காங்கிரசுக்கு தர்மசங்கடம்


பா.ஜனதா குதிரைபேர ஆடியோ போலியானது - எம்.எல்.ஏ. மறுப்பால் காங்கிரசுக்கு தர்மசங்கடம்
x
தினத்தந்தி 21 May 2018 1:50 PM GMT (Updated: 21 May 2018 1:50 PM GMT)

பா.ஜனதா குதிரைபேர ஆடியோ போலியானது என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #BJP


பெங்களூரு, 

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற்காக கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்தது எனவும் அக்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் வரிசையாக ஆடியோவையும் வெளியிட்டது.  
 
எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சிவராம் ஹெப்பூரின் மனைவியிடம் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, எடியூரப்பாவின் ஆதரவாளர் புட்டசாமி ஆகியோர் தனித்தனியாக செல்போனில் தொடர்பு கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவையும் காங்கிரஸ் வெளியிட்டது. அதாவது ரூ.15 கோடி அல்லது ரூ.5 கோடியுடன் மந்திரி பதவியை தருவதாக விஜயேந்திரா, புட்டசாமி ஆகியோர் கூறி சிவராம் ஹெப்பூரின் மனைவியிடம் பேரம் பேசுகிறார்கள். அதே வேளையில், சிவராம் ஹெப்பூரின் மனைவி தனது மகன் விவேக் ஹெப்பூர் மீதுள்ள வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறார். 

அதற்கு அவர்கள் 2 பேரும் சம்மதம் தெரிவித்து பேசுவது போல் ஆடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பூர் தனது ‘முகநூல்‘ (பேஸ்புக்) பக்கத்தில் தனது மனைவியுடன் பா.ஜனதா தலைவர்கள் பேசியதாக வெளியான ஆடியோவை பற்றி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், குதிரை பேர ஆடியோவில் வெளியான செல்போன் உரையாடலில் இருப்பது எனது மனைவியின் குரல் அல்ல. எனது மனைவி எந்த வித செல்போன் அழைப்பையும் ஏற்று பேசவில்லை. பா.ஜனதாவினர் எனது மனைவியுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியான ஆடியோ போலியானது. இதனை நான் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ ஆதாரத்தை, அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., போலியானது என கூறியிருப்பது அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story