எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது ஏன்? 4 ஆண்டு கால ஆட்சி நிறைவு விழாவில் பிரதமர் மோடி விளக்கம்


எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது ஏன்? 4 ஆண்டு கால ஆட்சி நிறைவு விழாவில் பிரதமர் மோடி விளக்கம்
x
தினத்தந்தி 26 May 2018 11:00 PM GMT (Updated: 26 May 2018 10:15 PM GMT)

தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி மத்திய அரசின் 4–வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

கட்டாக், 

தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி மத்திய அரசின் 4–வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

ஒடிசாவில் பொதுக்கூட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தனது அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பற்றி அவர் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:–

4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எனது அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனது அரசுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அதனால்தான், நாட்டில் 20 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. எங்களது 4 ஆண்டு கால செயல்பாடுகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

மோசமான ஆட்சியில் இருந்து நல்ல ஆட்சி நோக்கியும், கருப்பு பணத்தில் இருந்து மக்கள் பணத்தை நோக்கியும் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்துடன் எனது அரசு செயல்பட்டு வருவதை மக்கள் காணலாம். இந்த நாட்டை மாற்ற முடியும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர்.

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை

இந்த அரசு கடுமையான முடிவுகளை எடுக்க பயந்ததே இல்லை. இதுவரை 3 ஆயிரம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், கணக்கில் காட்டப்படாத ரூ.73 ஆயிரம் கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்துக்கு எதிரான, ஊழலுக்கு எதிரான இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால், சிலர் நடுங்கிப் போயுள்ளனர். அதனால், ஓரணியில் திரண்டுள்ளனர்.

இந்த அரசு, உறுதிப்பாடு மிக்க அரசு. துல்லியமான தாக்குதல் நடத்தும் துணிச்சல் உள்ள அரசு. ஆனால், காங்கிரஸ் கட்சியோ அதிகாரத்தை கைப்பற்றுவது பற்றி மட்டுமே எப்போதும் நினைக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆட்சியை மதிப்பிட மக்களுக்கு அழைப்பு

இதற்கிடையே, தனது 4 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை தனது பெயரிலான ‘நமோ’ செயலியில் மதிப்பீடு செய்யுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடு, அதன் முக்கிய திட்டங்கள், தங்கள் தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகள், தொகுதி வளர்ச்சி பணிகள் ஆகியவை பற்றி இந்த கருத்தாய்வில் பங்கேற்று கருத்து தெரிவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தங்கள் மாநிலத்திலும், தொகுதியிலும் மிகவும் பிரபலமான 3 பா.ஜனதா தலைவர்களை பட்டியலிடுமாறும் அதில் கேட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்களவை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.


Next Story