வேதாந்தாவிற்கு 2-வது சவால் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் ஒடிசாவில் பழங்குடியினர் போராட்டம்


வேதாந்தாவிற்கு 2-வது சவால் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் ஒடிசாவில் பழங்குடியினர் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2018 5:19 AM GMT (Updated: 14 Jun 2018 5:19 AM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை அடுத்து வேதாந்தாவிற்கு இரண்டாவது சவாலாக ஒடிசாவில் பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். #Sterlite

ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா மேற்கொண்ட முயற்சியை ஏற்கனவே 
டோங்கரியா கோண்டு பழங்குடியினர், சுற்றுசுழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

இப்போது பழங்குடியின மக்கள் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து உள்ளார்கள். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்திய போது 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. இது ஒடிசா மாநில பழங்குடியின மக்களுக்கு உத்வேகத்தை கொடுத்து உள்ளது. அவர்கள் இப்போது அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்ற ஸ்திரமான நிலையை முன்னெடுத்து உள்ளனர். ஆலையை விரிவாக்கம் செய்ய வேதாந்தா முயற்சி செய்து வரும் நிலையில் அங்கு எதிர்ப்பு வலுத்து உள்ளது. லாங்கிகரில் உள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஜூன் 5-ம் தேதி உள்ளூர் மக்கள் பேரணியை மேற்கொண்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கலந்துக்கொண்ட பேரணியில் பழங்குடியின தலைவர் லாடோ சிகாகா பேசியுள்ளார்.

பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் பாணியில் அவரது தோள் மீது கோடாரியை சுமந்துக்கொண்டு அவர் பேசுகையில்,  
 “நியாம்கிரிக்காக நம்முடைய ரத்தத்தை நாம் சிந்துவோம், நாம் நியாம்கிரிக்காக உயிரிழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.” 

 “வேதாந்தாவால் சிலருக்கு மட்டும் வேலைவாய்ப்பை கொடுக்க முடியும், ஆனால் நியாம் ராஜா (பழங்குடியின ஆண் தெய்வம்) நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். இறுதிவரையில் நம்முடைய போராட்டத்தை தொடர வேண்டும், தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டும்,” என உரையாற்றினார். 
 
 அவருக்கு பின்னால் இருந்த போஸ்டரில் “சுற்றுசூழலை மாசுப்படுத்தும் மற்றும் கொலையாளி நிறுவனம் ஸ்டெர்லைட் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். தூத்துக்குடியில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி,” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா முயற்சியை மேற்கொள்ளலாம் என்ற அச்சமானது பழங்குடியின மக்கள் மத்தியில் இன்னும் இருந்து வருகிறது. இந்நிலையில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசியுள்ள வேதாந்தா அதிகாரி, நியாம்கிரி சுரங்கம் என்பது நீண்ட கால நோக்கம் இருந்தது என குறிப்பிட்டு உள்ளார். “தொழிலில் பிரச்சனையிருக்கதான் செய்யும். காட்டுப்பகுதியில் ஆலையை அமைக்க வேண்டும் என்பதின் முக்கிய நோக்கமே பாக்ஸைட் பெற வேண்டும் என்பது மட்டும்தான்.” என கூறிஉள்ளார். பாக்ஸைட் சுரங்கம் இங்கு அமையும். பழங்குடியின மக்கள் வாய்ப்புகளை தேடுகிறார்கள், அவர்களில் ஒரு பகுதியினர்  முக்கியத்துவத்தில் சேர விரும்புகிறார்கள்,” எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள அறிக்கையில், ஒடிசாவில் பாக்ஸைட் சுரங்கங்கள் தொடர்பான எந்தஒரு ஏலத்திலும் கலந்துக்கொள்வோம் என வேதாந்தா தெரிவித்து உள்ளது. இருப்பினும் நியாம்கிரி வளத்தை பெருவது தொடர்பாக நம்பிக்கை இன்னும் உள்ளதா? என்ற கேள்விக்கு வேதாந்தா பதில் தெரிவிக்கவில்லை என ராய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story