இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைத்திருக்க வேண்டாம் பூடான் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை


இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைத்திருக்க வேண்டாம் பூடான் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2018 3:29 PM GMT (Updated: 21 Jun 2018 3:29 PM GMT)

இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைத்திருக்க வேண்டாம் என பூடான் ரிசர்வ் வங்கி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


புதுடெல்லி,
 
இந்திய அரசு மீண்டும் ரூபாய் நோட்டு ஒழிப்பு போன்ற நடவடிக்கையை முன்னெடுத்தால், அதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என பூடான்  மத்திய வங்கி ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்எம்ஏ) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ராயல் மானிட்டரி அத்தாரிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருப்பதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களுடைய வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துவிடுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் சேமித்து வைத்திருப்பதையும். செலவு செய்வதையும் தவிர்த்துவிடுங்கள். 2016-ல் இந்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கம் போல் ஏதேனும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட்டால், மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்தவகையிலும் பொறுப்பேற்காது. இந்திய அரசின் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாக புழங்கும் காரணத்தினால் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். இந்திய 500 ரூபாய் நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்து செலவு செய்ய வேண்டாம், சேமிக்கவும் வேண்டாம் என்று பூடான் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டைய நாடுகளான நேபாளம் மற்றும் பூடானில் இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தடையுமின்றி பயன்படுத்தப்படுகிறது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததும் அந்நாட்டிலும் குழப்பமான நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை பெரும் போராட்டத்திற்கு பின்னர் டெபாசிட் செய்தார்கள். இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 

Next Story