கொட்டும் மழையில், சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு


கொட்டும் மழையில், சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 July 2018 10:37 AM GMT (Updated: 9 July 2018 10:37 AM GMT)

மராட்டியத்தில் கொட்டும் மழையில் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நேரிட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். #MumbaiRains

மும்பை,

சிவாஜி சவுக் பகுதியில் சனிக்கிழமை மாலையில் நேரிட்ட இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பருவமழை காரணமாக மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. தலைநகரான மும்பை, மழையினால் நேரிட்ட வெள்ளம் காரணமாக தத்தளித்து வருகிறது. வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, விபத்து சம்பவங்களும் நேரிடுகிறது. கல்யாண் பகுதியில் சனிக்கிழமை மாலையில் நேரிட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அரசு பள்ளியில் பணியாற்றிய மணிஷா, மழை காரணமாக தன்னுடைய உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் குடையை பிடித்துக்கொண்டு சென்றுள்ளார். 

மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. மணிஷாவின் உறவினர் சாலையின் மையப்பகுதியில் இருந்த பள்ளத்தை தவிர்க்கும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். அப்போது நிலைத்தடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் பின் சக்கரம் மணிஷாவின் மேல் ஏறியது. இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மணிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவனையில் மணிஷா உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் பஸ் டிரைவருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். பஸ்சின் எண்ணை நாங்கள் கண்டுபிடித்து உள்ளோம், விரைவில் டிரைவரை கைது செய்வோம் என போலீஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளத்தை தற்காலிகமாக மூடினார்கள். மழை பெய்துவரும் நிலையில் தேவை நேரிட்டால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வாருங்கள் என டிராபிக் போலீஸ் கோரிக்கையை விடுத்துள்ளது. அவ்வபோது டிராபிக் தொடர்பாக ரேடியோ அப்டேட் மற்றும் வாட்ஸ் அப் அப்டேட்டை பார்க்கவேண்டும் என்று மக்களுக்கு அறிவுரையை வழங்கியுள்ளது. 

Next Story