தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு + "||" + 2nd phase of medical consultation suspension

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு
மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறது.
புதுடெல்லி, 

மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.

கடந்த மே 6-ந் தேதி, 136 நகரங்களில் நீட் தேர்வு நடந்தது. தமிழ் உள்பட 11 மொழிகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில், 10 நகரங்களில் 170 மையங்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் சுமார் 24 ஆயிரம் பேர் இந்த தேர்வை தமிழில் எழுதினார்கள்.

இதில், தமிழில் கேள்விகள் தவறாக இடம்பெற்று இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கும்போது இந்த குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறாக உள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தவறான கேள்விகளுக்காக, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையில் மாணவர்கள் தரவரிசை பட்டியலை புதிதாக தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது பற்றி சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வருகிறது. சி.பி.எஸ்.இ. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும், மொழி பெயர்ப்பில் குழப்பம் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ளதே இறுதியானதாக கருதப்படும் என்றும் தகவல் கையேட்டில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும்போது, இதை சுட்டிக்காட்டி வாதிடுவோம்” என்று சி.பி. எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் குறித்து தங்களிடம் சி.பி.எஸ்.இ. கருத்து கேட்கவில்லை என்றும், சி.பி.எஸ்.இ. சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஏற்கனவே ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த பட்டியல் நேற்று வெளியாகவில்லை. மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 2-வது கட்ட கலந்தாய்வு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்து உள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி, 7-ந்தேதி முடிவடைந்தது. அரசு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா கல்லூரியில் இருந்த 127 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அதேபோல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்புவதற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது.

சுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதி முதல் தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கலந்தாய்வு தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவின்படி சுயநிதி மருத்துவ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் ஜி.செல்வராஜன் தெரிவித்து உள்ளார்.