சந்திரயான்–2 விண்ணில் செலுத்துவது மீண்டும் தள்ளிவைப்பு இஸ்ரோ அதிகாரி தகவல்


சந்திரயான்–2 விண்ணில் செலுத்துவது மீண்டும் தள்ளிவைப்பு இஸ்ரோ அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 10:09 PM GMT)

சந்திரயான்–2 விண்கலம் செலுத்துவது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அது விண்ணில் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

சந்திரயான்–2 விண்கலம் செலுத்துவது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அது விண்ணில் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்–2

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–1 விண்கலத்தை 2008–ம் ஆண்டும், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் என்னும் விண்கலத்தை 2013–ம் ஆண்டிலும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ‘ விண்ணில் செலுத்தியது.

இத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்–2 என்னும் விண்கலத்தை தயாரித்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்திட இஸ்ரோ முடிவு செய்தது.

தரையிறங்கும் ஆய்வு வாகனம்

மேலும் நிலவின் தென் துருவ முனை பகுதியில் தரையிறங்கும் வகையில் ‘ரோவர்‘ ஆய்வு வாகனம் ஒன்றை முதல் முறையாக அனுப்பி ஆய்வு செய்யவும் இஸ்ரோ திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இதுவரை எந்தவொரு நாடும் நிலவின் தென்துருவ முனையை ஆய்வு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்–2 விண்கலத்தை கடந்த ஏப்ரல் மாதமே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் ராணுவ தகவல் தொடர்புக்கு உதவும் விதமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்–6ஏ செயற்கைகோள் தனது தொடர்பை இழந்தது.

இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பி.எஸ்.எல்.வி.–சி39 ராக்கெட்டுடன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1 எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மேற்புற வெப்பத் தகடு திறக்காததால் செயற்கைகோளை விடுவிக்க இயலாமல் போனது.

தள்ளி வைப்பு

இந்த 2 திட்டங்களிலும் பின்னடைவு ஏற்பட்டதால் சந்திரயான்–2 விண்கலம் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ மத்திய அரசிடம் தெரிவித்து இருந்தது. ஆனால் சந்திரயான்–2 விண்ணில் செலுத்துவது மீண்டும் தள்ளிப்போகும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே 2 ராக்கெட் திட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டதால் இஸ்ரோ மிக எச்சரிக்கையாக சந்திரயான்–2 விண்கலத்தை செலுத்த திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் சந்திரயான்–1, மங்கள்யான் ஆகியவற்றுக்கு பிறகு இந்திய விண்வெளி ஆய்வின் மிக முக்கியமானதொரு திட்டம் இதுவாகும். எனவே, இதில் இஸ்ரோ எந்த அவசரமும் காட்டவில்லை. அடுத்த ஆண்டு(2019) ஜனவரி மாதம் சந்திரயான்–2 விண்ணில் செலுத்தப்படும். அதற்கு முன்பாக அதன் மீது கூடுதல் சோதனைகளை தேசிய அளவிலான உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு மேற்கொள்ளும்“ என்று தெரிவித்தார்.


Next Story