மக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது


மக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 6 Aug 2018 11:20 PM GMT (Updated: 6 Aug 2018 11:20 PM GMT)

மக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேறியது.

புதுடெல்லி,

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப்பட்டவரை உடனடியாக கைது செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வட மாநிலங்களில் மூண்ட வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவும், அதன் பிரிவுகளை கடுமையாக்கும் நோக்கிலும் மக்களவையில் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை திருத்த மசோதா என்ற அந்த மசோதா நேற்று நிறைவேறியது.

இந்த புதிய மசோதாப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும். இதற்காக புலனாய்வு அதிகாரியின் ஒப்புதல் தேவை இல்லை. மேலும் 25 புதிய குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

Next Story