தேசிய செய்திகள்

மீனவ சகோதரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; ஒரு மீன் ரூ.5.5 லட்சத்திற்கு ஏலம் போனது + "||" + Fishermen are lucky as a fish was sold for Rs.5.5 lakh

மீனவ சகோதரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; ஒரு மீன் ரூ.5.5 லட்சத்திற்கு ஏலம் போனது

மீனவ சகோதரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; ஒரு மீன் ரூ.5.5 லட்சத்திற்கு ஏலம் போனது
மும்பையில் மீனவ சகோதரர்களின் வலையில் சிக்கிய மீன் ஒன்று ரூ.5.5 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையை சேர்ந்த சகோதரர்கள் மகேஷ் மெஹர் மற்றும் பரத்.  மீனவர்களான இவர்களிடம் சாய் லட்சுமி என்ற சிறிய படகு ஒன்று உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை இவர்கள் இருவரும் தங்களது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்களது வலையில் மற்ற வகை மீன்களுடன் கோல் என்ற வகையை சேர்ந்த மீன் ஒன்றும் சிக்கியுள்ளது.  மீன்களை பிடித்தபின் அவர்கள் முர்பே கடற்கரைக்கு திரும்பி உள்ளனர்.

இதில் கோல் மீன் 30 கிலோ எடை இருந்துள்ளது.  இந்த மீன் சுவை நிறைந்தது என்பதுடன் கிழக்கு ஆசிய பகுதியில் மருத்துவ பயன்படுத்துதலுக்காக அதிக விலை போகிறது.  ஏனெனில் இதன் உள்ளுறுப்புகளில் மருத்துவ பண்புகள் உள்ளன.

இந்த வகை மீன்கள் பல தரங்களாக உள்ளன.  குறைந்த தரம் கொண்ட மீன்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன.  அதிக தரமிக்க மீன்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறைந்த தர மீன்கள் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன.  இந்த நிலையில் மீனவ சகோதரர்கள் வலையில் சிக்கிய உயர்தர மீனானது ஏலத்தில் ரூ.5.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மகேஷ் கூறும்பொழுது, இந்த வகை மீன்கள் கிடைப்பது கடலில் லாட்டரி அடிப்பது போன்றது.  சமீப வருடங்களில் இந்த மீன்கள் கிடைப்பது இல்லை.  எனக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தினால் எனது படகுகள் மற்றும் வலைகளை சரி செய்வேன் என கூறினார்.

கடந்த மே மாதத்தில், வில்லியம் கப்ரூ என்ற மீனவர் வலையில் சிக்கிய உயர்தர கோல் மீன் ரூ.5.16 லட்சத்திற்கு விலை போனது.