தமிழகம் மற்றும் தேசிய அளவில் அரசியல் உலகில் உயர்ந்த தலைவர்; சோனியா காந்தி இரங்கல் கடிதம்


தமிழகம் மற்றும் தேசிய அளவில் அரசியல் உலகில் உயர்ந்த தலைவர்; சோனியா காந்தி இரங்கல் கடிதம்
x
தினத்தந்தி 8 Aug 2018 7:59 AM GMT (Updated: 8 Aug 2018 7:59 AM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன் என மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன் என கூறியுள்ளார்.  கலைஞர் அவர்கள் தமிழகம் மற்றும் தேசிய அளவில் அரசியல் உலகில் மற்றும் பொது வாழ்வில் உயர்ந்த தலைவர்.

அவர் தனது நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றிற்காவும் மற்றும் நாட்டின் மிக ஏழையான மற்றும் வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உடனின்றவர்.

அவர் என்னிடம் எப்பொழுதும் அன்புடன் நடந்து கொண்டவர்.  அவர் எனக்கு தந்தை போன்றவர்.  அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு என கூறியுள்ளார்.  அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story