பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்


பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம்: நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:17 AM GMT (Updated: 8 Aug 2018 10:17 AM GMT)

பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 71-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை  மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

மேலும்,  மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூறியுள்ள அறிவுறுத்தலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு “  சுதந்திர தினத்தன்று, பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கொடிகளை மக்கள் பயன்படுத்துவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. காகித தாள்களைப்போல, பிளாஸ்டிக் பேப்பர்கள் உடனடியாக மக்கும் பொருள் இல்லை என்பதால், தேசியக்கொடியின் கண்ணியத்தை காப்பதில் நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. தேசியக்கொடி அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-ன் பிரிவு 2 -ன் படி,  தேசியக்கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்கள் மேற்கொண்டால் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை  விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

எனவே, கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் கொடிகள், பேப்பர்களில் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் நிகழ்ச்சிகளுக்கு பிறகு, இவ்வாறாக பயன்படுத்தப்படும் கொடிகளை கண்ட இடங்களில் விட்டுச்செல்லக்கூடாது. தேசியக்கொடிக்குரிய கண்ணியம் மீறப்படாமல் தனிப்பட்ட இடத்தில் இவற்றை அகற்ற வேண்டும்.  பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று  மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் உரிய விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" இவை போன்ற அறிவுறுத்தல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

Next Story