தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு + "||" + Karnataka releasing more than one lakh cusecs of water Cauvery River

கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. #Cauvery

மைசூரு,  

கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர பகுதிகளான கார்வார், உடுப்பி, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்களிலும், மலை நாடு என அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 

இதனால் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் இரு முறை நிரம்பின. மேலும் பல அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. மீண்டும் மழை பெய்வதன் காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடி நீரும், கபினியிலிருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, சிவமொக்கா, பத்ராவதி, ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையே கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, மலை நாடு என அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் புதன்கிழமை முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மாலை வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.