புதுடெல்லி,
டெல்லியில் இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது. இந்த விவகாரத்தில், தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.