பா.ஜ.க. கூட்ட மேடையில் தாயாரின் புகைப்படம் இல்லாத கோபத்தில் வெளியேறிய யசோதரா ராஜே


பா.ஜ.க. கூட்ட மேடையில் தாயாரின் புகைப்படம் இல்லாத கோபத்தில் வெளியேறிய யசோதரா ராஜே
x
தினத்தந்தி 9 Sep 2018 5:02 AM GMT (Updated: 9 Sep 2018 5:02 AM GMT)

பா.ஜ.க. கூட்ட மேடையில் தாயாரின் புகைப்படம் இல்லாத கோபத்தில் விளையாட்டு துறை மந்திரி யசோதரா ராஜே வெளியேறினார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் போபால் நகரில் உள்ள பைராகாத் பகுதியில் நேற்று நடந்தது.  இதில் கலந்து கொள்ள விளையாட்டு துறை மந்திரி யசோதரா ராஜே சிந்தியா சென்றார்.

கூட்டம் நடந்த மேடையில் தீன்தயாள் உபாத்யாய், சியாம பிரசாத் முகர்ஜி, அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் குஷபாவ் தாக்ரே ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான விஜயா ராஜே சிந்தியாவின் புகைப்படம் அங்கு இல்லை.  இதனால் தனது தாயாரின் புகைப்படம் ஏன் இடம் பெறவில்லை? என யசோதரா கேள்வி எழுப்பினார்.  அங்கிருந்த தலைவர்கள் அவரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.  அது தோல்வியில் முடிந்தது.  அவர் அங்கிருந்து கோபமுடன் வெளியேறினார்.

இது தவறுதலாக நடந்து விட்டது என கூறி விஜயாராஜேவின் புகைப்படத்தினை மேடையில் வைத்துள்ளனர்.  ஆனால் மீண்டும் மேடைக்கு வர அவர் மறுத்து விட்டார்.

முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் நந்த் குமார் சவுகானுக்கு மேடையில் இடம் அளிக்கவில்லை என கூறி அவரும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.


Next Story