பட்டம் விட எதிர்ப்பு; பாடம் புகட்ட பெற்றோர், சகோதரியை கொலை செய்த வாலிபர் கைது


பட்டம் விட எதிர்ப்பு; பாடம் புகட்ட பெற்றோர், சகோதரியை கொலை செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 AM GMT (Updated: 11 Oct 2018 9:45 AM GMT)

பட்டம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

புதுடெல்லியின் தென்மேற்கில் வசித்து வந்தவர் மிதிலேஷ்.  கான்டிராக்டராக இருந்துள்ளார்.  இவரது மனைவி சியா.  இந்த தம்பதிக்கு சுராஜ் என்ற பெயர் கொண்ட சரணம் வர்மா (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர்.

இந்த நிலையில், சுராஜ் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளான்.  12ம் வகுப்பினை படித்து வந்த அவன் அதனை கைவிட்டு உள்ளான்.  ஊர் சுற்றி வந்த அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.  பின்னர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சிவில் பொறியியலுக்கான டிப்ளமோ படிப்பில் அவனை மிதிலேஷ் சேர்த்து விட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்டு 15ந்தேதி சுராஜின் குடும்பத்தினர் அவனை, பட்டம் விட்டு நேரத்தினை வீணடித்து கொண்டிருக்கிறாயே என திட்டியுள்ளனர்.  இதனால் மனவருத்தத்தில் இருந்த சுராஜ் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளான்.

தனது சகோதரிக்கு பெற்றோர் தன்னை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெற்றோரிடம் சகோதரி தகவல்களை கசிய விடுகிறாள் என்றும் அவன் உணர்ந்துள்ளான்.

கடந்த செவ்வாய் கிழமை நண்பர்களுடன் மெஹ்ராலி நகருக்கு சென்று ஆயுதங்களை வாங்கி வந்துள்ளான்.

அதன்பின் இரவில் பெற்றோருடன் சேர்ந்து புகைப்பட ஆல்பங்களை பார்த்துள்ளான்.  வழக்கம்போல் நடந்து கொண்டான்.  அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த அவன் மிதிலேஷை கத்தியால் பலமுறை குத்தி உள்ளான்.

சத்தம் கேட்டு அதே அறையில் தூங்கி கொண்டிருந்த சியா எழுந்து அலறினார்.  அவரை ஒரு முறை குத்தியுள்ளான்.  பின்னர் சகோதரி அறைக்கு சென்று அவரை கழுத்தில் குத்தியுள்ளான்.  அதனை தடுக்க வந்த சியா மற்றும் சகோதரியை கத்தியால் குத்தினான்.

இந்த சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.  அதன்பின்பு கைகளை கழுவி தடயங்களை அழித்து விட்டு வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து போட்டு விட்டு அருகில் வசிப்போரிடம் வீட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் வந்துள்ளனர் என கூறியுள்ளான்.

இதனை அடுத்து போலீசாரிடமும், கொள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளான்.  ஆனால் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என சுராஜ் கூறியுள்ளான்.  ஆனால் சுராஜை கொள்ளைக்காரன் விட்டு சென்றது ஏன் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.  தடய அறிவியல் குழு சுராஜ் தடயங்களை அழித்த விவரத்தினை கண்டறிந்தனர்.  அதன்பின் போலீசார் சுராஜிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன், போலியான கடத்தல் நாடகம் போட்டு வீட்டை விட்டு சுராஜ் ஓடியுள்ளான்.  ஆனால் பணம் இன்றி என்ன செய்வது என யோசித்த அவன் பின்னர் வீட்டுக்கு வந்து அமைதியுடன் பழக ஆரம்பித்துள்ளான் என போலீசார் கூறினர்.


Next Story