மசூதியில் தொழுகைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கேரள முஸ்லிம் பெண்கள் அமைப்பு முடிவு


மசூதியில் தொழுகைக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கேரள முஸ்லிம் பெண்கள் அமைப்பு முடிவு
x
தினத்தந்தி 11 Oct 2018 12:18 PM GMT (Updated: 11 Oct 2018 12:27 PM GMT)

நாடு முழுவதும் மசூதிகளுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்க கோரி கேரள முஸ்லிம் பெண்கள் உரிமை குழு சுப்ரீம் கோர்ட்டை அணுகவுள்ளது.

திருவனந்தபுரம்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கடந்த செப்டம்பர் 28ந்தேதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் உரிமை குழு (என்.ஐ.எஸ்.ஏ.) நாடு முழுவதும் உள்ள மசூதிகளுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளது.

இஸ்லாமிய மதத்தில் பாலின சமத்துவத்திற்காக இந்த அமைப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.  இதில் உள்ள நிக்கா ஹலாலா நடைமுறையை கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.  நிக்கா ஹலாலா என்ற சமூக சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் பெண் தனது முன்னாள் கணவரை மீண்டும் திருமணம் செய்ய அனுமதிக்கிறது.  ஆனால் அந்த பெண் மற்றொரு நபரை திருமணம் செய்து அதன்பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் இந்த அமைப்பின் தலைவர் ஜுஹ்ரா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மசூதிகளுக்குள் பெண்கள் நுழைவதற்கோ அல்லது இறைவணக்கம் செய்வதற்கோ புனித குரானோ அல்லது முகமது நபியோ எதிர்ப்பு தெரிவித்த ஆவண பதிவுகள் எங்கும் இல்லை என கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு இருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது வரலாற்று தீர்ப்பு என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று முஸ்லிம் சமூகத்தில் படித்த பெண்கள் பலர் உள்ளனர்.  ஆனால் அவர்கள் இமாம்கள் ஆகவோ அல்லது தொழுகையை வழிநடத்தி செல்லவோ அனுமதி இல்லை.  இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story