எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனு ஜனாதிபதியால் தள்ளுபடி; பா.ஜ.க.வின் முயற்சி தோல்வி: ஆம் ஆத்மி கட்சி


எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனு ஜனாதிபதியால் தள்ளுபடி; பா.ஜ.க.வின் முயற்சி தோல்வி:  ஆம் ஆத்மி கட்சி
x
தினத்தந்தி 25 Oct 2018 12:02 PM GMT (Updated: 25 Oct 2018 12:02 PM GMT)

எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த ஜனாதிபதியின் முடிவை வரவேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் லாப நோக்குடன் மற்றொரு அமைப்பின் தலைவர்களாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்கம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஜனாதிபதியின் முடிவை வரவேற்கிறோம்.  இதற்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த முடிவானது டெல்லியில் கெஜ்ரிவால் அரசை கலைக்க மேற்கொண்ட பாரதீய ஜனதா அரசின் முயற்சியை தோல்வி அடைய செய்துள்ளது.

சி.பி.ஐ. துறையில் இன்று நடந்து வரும் விசயங்கள், அரசியலமைப்பிற்கு உட்பட்ட அமைப்புகளை பலவீனப்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகளின் வீடுகளில் சோதனைகள், மற்றொரு அமைப்பின் தலைவர்களாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 27 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய சமீபத்திய முயற்சி என டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசை குறிவைத்து அனைத்து விசயங்களும் தொடங்கின என அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  டெல்லியில் உள்ள நகரில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து ரோகி கல்யாண் சமிதிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ந்தேதி ஆளும் அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல துறை வெளியிட்ட உத்தரவில், ரோகி கல்யாண் சமிதிகள் (நோயாளிகள் நல குழு) சுகாதார வசதிகள், வளர்ச்சி உள்ளிட்ட வசதிகளை வழங்கும்.  இந்த அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், இந்த அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் லாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.  அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்.  அவர்கள் இந்த மனு மீது அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி ராம்நாத் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story