வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை, தகுதி மிக்க மாணவிகளுக்கு ஸ்கூட்டி; மத்திய பிரதேச பா.ஜ.க. தேர்தல் அறிக்கை


வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை, தகுதி மிக்க மாணவிகளுக்கு ஸ்கூட்டி; மத்திய பிரதேச பா.ஜ.க. தேர்தல் அறிக்கை
x

ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேருக்கு வேலை, தகுதி மிக்க மாணவிகளுக்கு ஸ்கூட்டி போன்றவை மத்திய பிரதேச பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போபால்,

230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கு வருகிற 28ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதன் முடிவுகள் டிசம்பர் 11ல் வெளியிடப்படும்.

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வெளியிட்டார்.  அவருடன் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அக்கட்சியின் பிற உயர்மட்ட தலைவர்கள் இருந்தனர்.

அதில் விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன், உணவு பதப்படுத்துதலை ஊக்குவிப்பதற்காக பல்கலை கழகம், அடுத்த 5 ஆண்டுகளில் நீர்ப்பாசன பகுதிகளை 80 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பது ஆகியவை வேளாண் நலன்களை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று 12ம் வகுப்பு வாரிய தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும்.  பள்ளி கூடங்களில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என உறுதியளிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.  அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகள் மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story