ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா திடீர் பாராட்டு


ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா திடீர் பாராட்டு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:15 AM GMT (Updated: 28 Nov 2018 7:32 AM GMT)

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நடவடிக்கையை மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

ஸ்ரீநகர்

காஷ்மீர் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த பிடிபி கட்சி, எதிர்க்கட்சிகளாக தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ்  ஆகியவை ஆதரவுடன் ஆட்சி அமைக்கக் கோரியது. மற்றொரு பக்கம் மக்கள் மாநாட்டுக் கட்சி பாஜக ஆதரவுடன், மற்ற கட்சிகளின் துணையுடனும் ஆட்சி அமைக்கக் கோரியது. இதனால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறி சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார். ஆளுநரின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் விருப்பத்துக்கு மாறாக சட்டப்பேரவையை கலைக்க நடவடிக்கை எடுத்ததாக ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியிருக்கிறார். 

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சத்யபால் மாலிக் பேசியதாவது:- “மெகபூபா முப்தி ஆட்சி அமைக்க உரிமை கோரிய தினம், பண்டிகை தினமாகும். அன்றைய தினம் ஃபேக்ஸ் இயந்திரம் வாயிலாக ஆட்சி அமைக்க உரிமை கோரி அவர் கடிதம் அனுப்பினார். 

அவர்கள், என்னை அந்த இயந்திரத்தின் அருகில் எப்போதும் இருப்பேன் என்று கருதிவிட்டார்களா என்று தெரியவில்லை. மெகபூபாவும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்திருந்தால், முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

சட்டப் பேரவை கலைக்கப்பட்டதும், உமர் அப்துல்லாவும், மெகபூபாவும் இதுதான் எங்களுக்கு தேவை என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டெல்லியில் இருந்து  அன்றைய தினம் நான் காஷ்மீர் வந்ததும், உளவுத் துறை அதிகாரிகள் நிலவரத்தை என்னிடம் எடுத்துரைத்தனர். அதை தீவிரமாக பரிசீலித்த நான், எனக்கு அளிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டு பேரவையைக் கலைக்கும் முடிவை எடுத்தேன். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை.

பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ நான் முன் அனுமதி பெற வேண்டியதில்லை.மத்திய அரசின் விருப்பத்தின்படி சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன்.என்னை தவறாக நினைத்தாலும் கவலையில்லை. நான் செய்தது சரி என்றே கருதுகிறேன்” என்றார். 

ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்துக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ பேக்ஸ் இயந்திர குளறுபடி விவகாரத்தை ஒதுக்கி வைத்து விடுவோம், டெல்லியில் இருந்து வரும் உத்தரவை பின்பற்ற மறுத்து இருப்பது வரவேற்கதக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தை கொடுத்து உள்ளது” என்றார். இதேபோல், ஆளுநரின் நடவடிக்கையை பாராட்டி  உமர் அப்துல்லாவும் டுவிட் செய்துள்ளார்.

Next Story