மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது


மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 29 Nov 2018 3:49 PM GMT (Updated: 29 Nov 2018 3:49 PM GMT)

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மராட்டிய சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.


மும்பை, 

மராட்டியத்தில் மொத்த மக்கள் தொகையான 13 கோடியில் மராத்தா சமுதாயத்தினர் 33 சதவீதம். கல்வி, வேலைவாய்ப்பில் தங்களது சமூகம் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், அவற்றில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மராத்தா சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டமும் நடைபெற்றது. 

ஜூலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுச்சொத்துகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே மராத்தா சமுதாயத்தினரின் சமூக, பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு கேட்டுக்கொண்டது. 

இந்த ஆணையம் சமீபத்தில் தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அந்த ஆய்வு அறிக்கையில், மராத்தா சமுதாய மக்கள் தொகையில் 37.28 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாகவும், 93 சதவீத குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஆய்வு அறிக்கை மூலம் அந்த சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க சாதகமான சூழல் உருவானது. மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தங்கர் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

இந்த நிலையில் மராட்டிய சட்டசபையில் மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிமுகம் செய்தார். சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்வதாகவும், இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா மேல்-சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட உள்ளது. 

Next Story