எம்.பி., எம்.எல்.ஏ. தொடர்புடைய தீர்க்கப்படாத குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 4,122; சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது 4,122 குற்ற வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில், குற்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என கோரி பா.ஜ.க. தலைவர் அஸ்வினி உபாத்யாய் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், நடப்பு மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்புடைய குற்ற வழக்குகளை பற்றிய பொது நல வழக்கின் மீது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொள்கிறது.
இதற்காக, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பற்றி மாநில மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் இருந்து விரிவான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த வழக்குகளை பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முடியும்.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, மாநில மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் இருந்து பெற்ற தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். இதில், நடப்பு மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது 4,122 குற்ற வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில வழக்குகளும் உள்ளன என தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story