நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. பரிந்துரை செய்ததா? - சு.திருநாவுக்கரசர் பதில்


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. பரிந்துரை செய்ததா? - சு.திருநாவுக்கரசர் பதில்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 7:59 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க. பரிந்துரைத்ததா? என்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பதில் அளித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் நேற்று தனித்தனியாக சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சோனியா காந்தியை சந்தித்துவிட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் வருகிற 16-ந் தேதி நடைபெறும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

என்னைப்பற்றி இளங்கோவன் பேசுவது அவரது விருப்பம். அவர் மேல் நான் வைத்திருக்கும் காதலுக்கு அவர் பெருமைப்படுவது போல, என்மேல் அவர் வைத்திருக்கும் காதலுக்கு அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். அவர் என்னை மட்டுமல்ல, யாரையாவது விட்டு வைத்திருக்கிறாரா? அவர் திட்டுவதை பற்றி நான் கவலைப்படவில்லை. இளங்கோவனை சந்தோஷப்படுத்துவது என் வேலை அல்ல. கட்சி நடத்துவது, ராகுல்காந்தி சொல்வதை செய்வதுதான் என் வேலை. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

பேட்டியின்போது, காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க. பிரமுகர், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பரிந்துரைத்து இருப்பதாக வெளியான தகவல் பற்றி திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில்; காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க.வில் இருந்து எப்படி கொடுக்க முடியும்? என்றும், அது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது பேச்சுவார்த்தை நடத்தி எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும் என்று கூறிய திருநாவுக்கரசர், கட்சி தலைமை சொன்னால் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அவர் டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் பற்றி மூத்த தலைவர்கள் யாரும் பேசுவதில்லை என்றும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் பேசி வருவதாகவும், அவர் தலைவராக வரப்போவது இல்லை என்றும் கூறினார்.

இதேபோல் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் மாநில காங்கிரஸ் தலைமை மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறதா? என்றும், நீங்கள் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்) தலைவராக வரமுடியாது என்று திருநாவுக்கரசர் கூறி இருப்பது பற்றியும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

என்மீது சு.திருநாவுக்கரசருக்கு இருக்கிற காதலை எண்ணி பெருமைப்படுகிறேன். என்மேல் அன்பும், பாசமும் வைத்ததற்கு அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். யாரை தலைவராக நியமிப்பது என்பதையெல்லாம் ராகுல்காந்திதான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையை ராகுல்காந்தியிடம் சொல்லி இருக்கிறேன். அவர் முடிவு எடுப்பார்.

திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்ற கருத்து இருக்கிறது. தமிழக காங்கிரசை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் கண்டிப்பாக எடுப்பார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஏற்கனவே முடிவான ஒன்று. இந்த கூட்டணி மாற வாய்ப்பு இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. பிரமுகர் ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் கொடுத்ததாக வெளியான தகவல் பற்றி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, “தி.மு.க.வினர் கொடுத்து இருக்க மாட்டார்கள். இதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது. தேர்தலுக்கு இன்னும் நாலைந்து மாதங்கள் உள்ளன. ஆனால் கண்டிப்பாக தேர்தலுக்கு முன்பு தமிழக காங்கிரசாரை கலந்து பேசாமல் பட்டியல் தர வாய்ப்பு இல்லை” என்று கூறினார்.



Next Story