மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது; யார் முதல் அமைச்சர்?


மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது; யார் முதல் அமைச்சர்?
x
தினத்தந்தி 12 Dec 2018 7:25 AM GMT (Updated: 12 Dec 2018 7:56 AM GMT)

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர் ஆனந்திபென் படேல்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது.

ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.  பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.  சுயேட்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  ஆட்சி அமைக்க தேவையான 116 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை.  சுயேச்சைகளின் ஆதரவை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்று கூறி உள்ளார்.மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், தேவைபட்டால் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். . இதுபோல் சமாஜ் வாதி கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆனந்திபென் படேல் 

அழைப்பை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு கமல்நாத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை சந்தித்தனர். ஆட்சி அமைக்க  காங்கிரஸ் சார்பில் உரிமை கோரப்பட்டு உள்ளது ஆட்சி அமைக்க 121  உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக கவர்னரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் போபாலில் இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ்  எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார், கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது. ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார்.

Next Story