மேகதாது அணை விவகாரம்: அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்


மேகதாது அணை விவகாரம்: அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் அமளியால் நாடாளுமன்றம் முடக்கம்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:25 PM GMT (Updated: 12 Dec 2018 11:25 PM GMT)

மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வரும் கர்நாடக அரசு, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கர்நாடக நீர்ப்பாசனத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்த அணை விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேகதாது அணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மாநில கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த பிரச்சினையை நேற்று நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பினர்.

அதன்படி மாநிலங்களவை காலையில் கூடியதும் தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று காவிரி டெல்டா விவசாயிகளை காப்பாற்றுமாறு கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கை அடங்கிய பேனர்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த கோரிக்கை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அவையில் விவாதிக்கலாம் எனக்கூறிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஆனால் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இந்த பிரச்சினையை விவாதிக்க முடியாது எனக்கூறினார். மேலும் மக்களின் உணர்வுகளை மதித்து உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்க மறுத்த எம்.பி.க்கள், தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால் சபை நண்பகல் வரையும், பின்னர் 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது. மதிய இடைவேளைக்குப்பின் சபை 2 மணிக்கு மீண்டும் கூடியபோதும் தமிழக எம்.பி.க்களின் அமளி தொடர்ந்தது. ‘காவிரி விவகாரத்தில் நீதி வழங்க வேண்டும்’ என அவர்கள் கோ‌ஷமிட்டவாறே இருந்தனர்.

இந்த அமளிக்கு மத்தியிலும் ஆட்டிசம் நபர்கள் தேசிய அறக்கட்டளை திருத்த மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட வெங்கையா நாயுடு, பின்னர் அதன் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேறியது.

அதேநேரம் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக எம்.பி.க்களால் தொடர்ந்து அமளி நிலவியதால் பின்னர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் மக்களவையிலும் நேற்று புயலை கிளப்பியது. காலையில் சபை தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று இந்த பிரச்சினையை எழுப்பினர். இதைப்போல ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு காங்கிரசாரும், அயோத்தியில் ராமர் கோவில் கேட்டு சிவசேனா எம்.பி.க்களும் சபையின் மையப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு சென்று அமைதி காக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரிக்கை விடுத்தார். ஆனால் உறுப்பினர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து சபையை 12 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

பின்னர் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் அவையில் இதே நிலைதான் நீடித்தது. அ.தி.மு.க., காங்கிரஸ், சிவசேனா உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் மற்றும் விளையாட்டு வீரர்கள் சோனியா சாகல், சிம்ரன்ஜித் கவுர் ஆகியோருக்கு இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைகோள் ஏவப்பட்டதற்காக இஸ்ரோ அதிகாரிகளுக்கும் வாழ்த்து கூறப்பட்டது.


Next Story