கடந்த 4 வருடத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் -பிரதமர் மோடி


கடந்த 4 வருடத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Dec 2018 12:19 PM GMT (Updated: 15 Dec 2018 12:19 PM GMT)

கடந்த 4 வருடத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களின் முடிவு பாஜக சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு பேரிடியாக அமைந்து விட்டது. இதையடுத்து அடுத்து வரும் பொதுத்தேர்தலில் இந்த தோல்வி எதிரொலிக்கும் என்பதால் பாஜக இப்போதே வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டது. 

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி, ஆலோசனை நடத்துவதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறார். “என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொண்டனர். 

இதற்காக, அந்தந்த பாராளுமன்ற தொகுதிகளில் தனித்தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி தொகுதியில் நாகர்கோவிலில் உள்ள பெருமாள் திருமண மண்டபமும், கோவை தொகுதியில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கத்திலும், சேலம் தொகுதியில் அம்மாபேட்டை சிவாஜி நகரில் உள்ள வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியிலும், நாமக்கல் தொகுதியில் பொம்மக்குட்டைமேடு கவின் மஹாலிலும், நீலகிரி தொகுதியில் ஊட்டி எங்படுகா அசோசியேஷன் ஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 2 பேர் வீதம் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மோடி கட்-அவுட் அருகே நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேச்சை, தமிழ் மொழியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகள், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர்.

தமிழக பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா முழுவதும் தொழில்துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் பணவீக்க சிக்கலை நாங்கள் வெற்றிகரமாகச் சந்தித்தோம். தமிழகத்தில் கடந்த 4 வருடத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3,000 கிராமசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் விளக்கி சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story