மின் இணைப்பு வழங்க வேண்டும் : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு


மின் இணைப்பு வழங்க வேண்டும் : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2018 12:15 AM GMT (Updated: 15 Dec 2018 10:52 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நேற்று அதிரடியாக ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது.


புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், அதை நிரந்தரமாக மூடக்கோரி, அங்கு கடந்த மே மாதம் 22-ந் தேதி பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆகஸ்டு 9-ந் தேதி தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு, நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மேகாலயா ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் சூழலியல் விஞ்ஞானிகள் சதீஷ் சி.கர்கோட்டி, எச்.டி.வரலட்சுமி ஆகிய 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டு அறிந்தது. பின்னர் இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்றும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் ஆலையை மூடுவதற்கு நியாயமானவையாக அமையவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் கருதும்பட்சத்தில் காற்று, நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேம்பாடு குறித்து இந்த குழு வழங்கும் 25 பரிந்துரைகளை நிபந்தனைகளாக முன்வைத்து அனுமதி வழங்கலாம் என்றும் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கைக்கு தமிழக அரசின் சார்பிலும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பிலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாகவும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்தில் ஆலை நிர்வாகம் ஏற்கனவே மனு தாக்கல் செய்து இருப்பதால், பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதியுடன் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், கே.ராம கிருஷ்ணன், சத்யவான் சிங் கர்பால், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியும் அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கவும், ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே விசாரணை நடத்தப்பட்டு, நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

நிபுணர் குழுவினர் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு நேரில் சென்றும், பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தும் ஆய்வு நடத்தி உள்ளனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூடுமாறு தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில், தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர்குழு அறிக்கையில் உள்ள முக்கிய பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். இதில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். உரிய சுற்றுச்சூழல் சட்டத்தின் அடிப்படையில் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

ஆலையின் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்க வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, சில நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் கருத்துகளும் இடம்பெறும் வகையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் புதிதாக ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும். அதில் சுற்றுச்சூழல் குறித்த அனைத்து புகார்களும் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும். இந்த இணையதளம் குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த இணையதளத்தில் மாவட்ட கலெக்டர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கும் இணைப்பு வழங்க வேண்டும்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின் அடிப்படையில் நிலத்தடி நீரின் தன்மையை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கண்டறிய வேண்டும். இதுபற்றியும் ஆலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

தாமிர கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் முன்பணமாக ரூ.2½ கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகையை மாநில சட்டப்பணிகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும்.

நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் எவ்வளவு கால வரையறையில் நிறைவேற்றப்படும் என்பதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதில் ஒரு தவறு நிகழ்ந்தாலும் அந்த தவறுக்கு ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும். இந்த தொகை மாவட்ட சட்ட சேவை மையத்துக்கு வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் கல்வி குறித்த விழிப்புணர்வுக்கு செலவழிக்கப்பட வேண்டும்.

ஆலையில் உருவாகும் திடக்கழிவுகள் முறையாக அப்புறப்படுத்துகிறதா? என்பதை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதிநிதி ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையின் போது தூத்துக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி, மருத்துவ வசதி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக மேலும் ரூ.100 கோடி செலவு செய்ய ஆலை நிர்வாகம் தயாராக இருப்பதாக பசுமை தீர்ப்பாயத்தில் கூறப்பட்டது. மக்கள் மேம்பாட்டுக்கான இந்த தொகையை ஆலை நிர்வாகம் 3 ஆண்டுகளுக்குள் செலவழிக்க வேண்டும்.

இது தொடர்பான செயல்திட்டத்தை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுடன் தயாரிக்க வேண்டும். இந்த செயல்திட்டம் பற்றியும் ஸ்டெர்லைட் ஆலையின் இணையதளத்தில் வெளியிடவேண்டும்.

தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து, இன்னும் 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் புதிய உத்தரவை வெளியிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மின்சார இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Next Story