ரபேல் விவகாரம்: கார்கேவிற்கு எதிர்ப்பு; ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்குமா?


ரபேல் விவகாரம்: கார்கேவிற்கு எதிர்ப்பு; ஏஜி, சிஏஜிக்கு  நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்குமா?
x
தினத்தந்தி 16 Dec 2018 12:42 PM GMT (Updated: 16 Dec 2018 12:42 PM GMT)

ரபேல் விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவின் நோக்கத்திற்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏஜி, சிஏஜிக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்காமல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு  தீர்ப்பு கூறியது. இதுபற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், ரபேல் போர் விமான பேரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்படவே இல்லை. அந்த அறிக்கை எங்கே போனது? ஒருவேளை, வேறு ஏதேனும் பொது கணக்கு குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளாரா? 

எங்களின் அடிப்படை கோரிக்கை, இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். கூட்டுக்குழு விசாரணை நடத்தினால், பிரதமர் மோடி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர் அம்பலத்துக்கு வரும். மோடி அரசு, எல்லா அமைப்புகளையும் சீரழித்து வருகிறது. அதன் மேற்பார்வையில், ரபேல் பேரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரூ.526 கோடியாக இருந்த விமானத்தின் விலை, ரூ.1,600 கோடியாக உயர்ந்தது ஏன் என்பதுதான் எங்களது அடிப்படை கேள்வி என்றார். 

நாட்டையும், மக்களையும் ஏமாற்றிய பாரதீய ஜனதா அரசு, இப்போது ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்களை தெரிவித்து உள்ளது என்றும், இது கோர்ட்டு அவமதிப்பு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு கூறவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணம் காட்டுகிறது என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்துள்ளது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் அப்படி எந்த ஒரு அறிக்கையும் எனக்கு வரவில்லை என்று நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகிறார். அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பு? யார் இதை சொன்னது? மத்திய அரசுதான் இதை கூறி இருக்கிறது. எப்படி அட்டார்னி ஜெனரல், அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்?” என சரமாரியாக காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. தீர்ப்பில் குறிப்பிட்ட பத்தியில் திருத்தம் செய்ய வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

பொது கணக்கு குழு சம்மன்?

ரபேல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் தொடர்பாக சிஏஜி மற்றும்  அட்டார்னி ஜெனரலுக்கு சம்மன் விடுக்க பொது கணக்கு குழு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுப்பேன் என மல்லிகார்ஜுன கார்கே கூறினார். 

இதற்கிடையே ரபேல் விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவின் நோக்கத்திற்கு மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏஜி, சிஏஜிக்கு  நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன் விடுக்காமல் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 22 உறுப்பினர்களை கொண்ட பொது கணக்கு குழுவில் மெஜாரிட்டியான உறுப்பினர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். 12 எம்.பி.க்கள் பா.ஜனதாவினர். அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, அகாலி தளத்திற்கு தலா ஒரு எம்.பி.க்கள் உள்ளது. காங்கிரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே உள்பட மூவர் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த இரு எம்.பி.க்களும், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், அதிமுகவை சேர்ந்த தலா ஒரு எம்.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

 பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பர்துஹரி மக்தாப் பேசுகையில், “பொது கணக்கு குழுதலைவர் தன்னுடைய செல்வாக்கில் ஏஜி மற்றும் சிஏஜிக்கு சம்மன் விடுக்க முடியும், ஆனால் மொத்த குழுவிற்கு மத்தியில் அழைக்க முடியாது. ரபேல் விவகாரம் 2018-19-ம் ஆண்டுக்கானது கிடையாது. ரபேல் விவகாரம் தொடர்பாக சிஏஜியின் அறிக்கை ஏற்கனவே இங்கு வைக்கப்படவில்லை,” என கூறியுள்ளார். தனிப்பட்ட செல்வாக்கில் அழைக்கப்பட்டாலும் அதிகாரிகளின் அறிக்கை பதிவு செய்யப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதே கருத்தை பதிவு செய்யும் தெலுங்கு தேசம் எம்.பி. சிஎம் ரமேஷ்,  ஏஜி மற்றும் சிஏஜிக்கு குழு சம்மன் விடுக்கலாம், ஆனால் அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் அதனை செய்ய முடியும் என கூறியுள்ளார். பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் சம்மன் விடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் இது சுப்ரீம் கோர்ட்டை கேள்வி எழுப்புவதாகும் என்கிறார்கள். 


Next Story