ராகுல் காந்தியை முன்மொழிந்த விவகாரம்: ‘தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை’ - இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கருத்து


ராகுல் காந்தியை முன்மொழிந்த விவகாரம்: ‘தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை’ - இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:35 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை என இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் கூறியுள்ளன.

ஐதராபாத்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டமும் டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்த கூட்டணி அமைந்தாலும், அதன் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் பல கட்சிகளுக்கு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்கு பின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தக்கூடாது எனவும் அந்த கட்சிகள் கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், பிரதமர் வேட்பாளரை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.

அத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கு இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவை இல்லை என அந்த கட்சிகள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி கூறுகையில், ‘எதிர்க் கட்சி கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யோசனை இருக்கும். ஒருவரை பிரதமர் வேட்பாளராக யாராவது முன்மொழிந்தால் அதை எங்களால் தடுக்க முடியாது. அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

அதேநேரம், யார் பிரதமராக வேண்டும்? என்பதை தேர்தலுக்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம் என்று கூறிய அவர், பிரதமர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகள் விரும்பினால், அது தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகுதான் முடிவு எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல, பிற எதிர்க்கட்சிகளும் கூட கருதுகின்றன. அதற்கு மாறாக பிரதமர் வேட்பாளரை தற்போதே அறிவிப்பது எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டார்.

இதைப்போல தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நவாப் மாலிக் கூறுகையில், ‘பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யலாம் என காங்கிரஸ் கட்சியே கூறியிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரசும், ஒத்த கருத்துள்ள பிற கட்சிகளும் ஏற்கனவே விவாதித்து இருக்கின்றன. அந்தவகையில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தேர்தலுக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவு எடுக்கும். எனினும் ராகுல் காந்தியை பிரதமராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது வரவேற்புக் குரியது’ என்று தெரிவித்தார்.


Next Story