ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 9:45 PM GMT (Updated: 18 Dec 2018 7:24 PM GMT)

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஜனவரி 11-ந் தேதிவரை கைது செய்யக்கூடாது என்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என ப.சிதம்பரம் சார்பில் கடந்த மே மாதம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்ய தடை விதித்தார். பின்னர் இந்த தடை அடிக்கடி நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 26-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டிசம்பர் 18-ந் தேதிவரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்யக்கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், இந்த வழக்கில் மேலும் 5 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டி இருப்பதாகவும், இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றை பரிசீலனை செய்து தாக்கல் செய்ய மேலும் ஒரு வார கால அவகாசம் தேவை என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், கோர்ட்டு விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும் என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற ஜனவரி 11-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அதுவரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.


Next Story