விமானப்படையை மேம்படுத்த ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி-எப் 11’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது - இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்


விமானப்படையை மேம்படுத்த ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி-எப் 11’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது -  இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்
x
தினத்தந்தி 19 Dec 2018 11:00 PM GMT (Updated: 19 Dec 2018 8:55 PM GMT)

விமானப்படையை மேம்படுத்த ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோளை சுமந்துகொண்டு ‘ஜி.எஸ்.எல்.வி- எப்11’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விமானப்படையை மேம்படுத்த உதவும் வகையில் ‘ஜி-சாட் 7ஏ’ என்ற செயற்கைகோளை சிறப்பாக உருவாக்கியது. இது 39-வது தகவல் தொடர்பு செயற்கை கோள் ஆகும்.

இந்த செயற்கை கோள், 2,250 கிலோ எடை கொண்டதாகும். இது பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும் சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை கோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 நவீன ரக கேமராக்கள், தகவல்களை சேகரிப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுடைய ஆயுள் காலம் 8 ஆண்டுகளாகும்.

இந்த செயற்கை கோள், தரையில் உள்ள ரேடார் நிலையங்கள், விமானப்படை தளங்கள், வான் ஆபத்து எச்சரிக்கை மற்றும் போர் விமானம் ஆகியவற்றுடன் விமானப்படை தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள பயன்படும்.

மேலும் விமானப்படையின் நெட்வொர்க் மையப்படுத்தப்பட்ட போர்த்திறன்களை மேம்படுத்தவும் துணை நிற்கும். ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு இந்த செயற்கை கோள் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கும். போர் விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறியவும் உதவும். போர் விமானிகள் விமானத்தில் இருந்தவாறு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

இந்த செயற்கை கோளை ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட்டில் பொருத்தி நேற்று விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டம் தீட்டியது. இந்த ராக்கெட், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தியது என்பது சிறப்பம்சம்.

இந்த ராக்கெட், ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கைகோளை சுமந்து கொண்டு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை சரியாக 4.10 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

விண்ணில் சீறிப்பாய்ந்த 19 நிமிடம் 15 வினாடிகளில் திட்டமிட்ட உயரத்தை அடைந்ததும், ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி-எப்11 ராக்கெட் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. அதன் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

இந்த ராக்கெட், நான்காம் தலைமுறை ராக்கெட் ஆகும்.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களை தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். வானம் நேற்று தெளிவாக இருந்ததால் ராக்கெட் ஏவப்பட்டு சில விநாடிகள் வரை முழுமையாக காணமுடிந்தது.

ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் தலைவர் கே.சிவன் பேசினார். அப்போது அவர், “ ‘ஜி-சாட் 7ஏ’ செயற்கை கோள் 35 நாளில் விண்ணில் செலுத்தப்பட்ட மூன்றாவது தகவல் தொடர்பு செயற்கை கோள் ஆகும். கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் சுமந்து சென்ற அதிக எடை கொண்ட செயற்கை கோள் இது” என பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், “தற்போது செயற்கைகோளின் மேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய தகடுகள் சில நிமிடங்களில் செயல்பட தொடங்கியது. நாளை (இன்று) காலை செயற்கை கோளை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் தொடங்கும்” எனவும் குறிப்பிட்டார்.



Next Story