சபரிமலையில் நாளை மண்டல பூஜை பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


சபரிமலையில் நாளை மண்டல பூஜை பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:00 PM GMT (Updated: 25 Dec 2018 10:21 PM GMT)

சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16–ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், நெய் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) பகல் 11.55 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது.

பூஜையின் போது, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வழங்கிய 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 23–ந்தேதி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும். தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18–ம் படிக்குகீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

அதன்பிறகு 18–ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார தீபாராதனை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணி வரை மட்டும் நெய் அபிஷேகம் நடைபெறும். பகல் 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மண்டல பூஜை நடைபெறும்.

மண்டல பூஜையில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

மகர விளக்கையொட்டி அய்யப்பன் கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30–ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14–ந் தேதி நடக்கிறது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்தனர். இதனால் எரிமேலியில் இருந்து நிலக்கல் வரை வாகன நெருக்கடியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பம்பை, சன்னிதானம் மற்றும் நிலக்கல் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சன்னிதானத்தில், பக்தர்கள் கொண்டுவரும் பைகள் மற்றும் உடமைகள் வெடிகுண்டு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்களும் சன்னிதானத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story