பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத கூட்டணி; சந்திரசேகர் ராவை சந்திப்பதை ஒத்திவைத்தார் மாயாவதி


பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத கூட்டணி; சந்திரசேகர் ராவை சந்திப்பதை ஒத்திவைத்தார் மாயாவதி
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 PM GMT (Updated: 26 Dec 2018 3:30 PM GMT)

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி ஒத்திவைத்தார் என தகவல் வெளியாகியுள்ளது.


புதுடெல்லி,  

 
நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன.  

காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகள் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.  பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க ஆந்திர முதல்–மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார். பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் வெற்றிபெற்ற  சந்திரசேகர் ராவ் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் இல்லாத ஒரு புதிய கூட்டணியை ‘கூட்டாட்சி முன்னணி’ என்ற பெயரில் உருவாக்க முயற்சியை தொடங்கியுள்ளார்.  முதலாவதாக ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக்கை சந்தித்து பேசினார்.  பின்னர் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். 

 டெல்லி சென்றுள்ள சந்திரசேகர் ராவ்  சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து பேசுவதாக இருந்தார். ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கான காரணம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இதற்கிடையே வருகிற 6–ந் தேதி நான் ஐதராபாத் சென்று அவரை சந்திக்க உள்ளேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.  

இந்நிலையில்  சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி ஒத்திவைத்தார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருக்கும் அவர் சந்திரசேகர் ராவை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.


Next Story