கேரளா முழுவதும் பதற்றம் நீடிப்பு: சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தாரா? - மாறுபட்ட தகவல்களால் குழப்பம்


கேரளா முழுவதும் பதற்றம் நீடிப்பு: சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம் செய்தாரா? - மாறுபட்ட தகவல்களால் குழப்பம்
x
தினத்தந்தி 4 Jan 2019 11:00 PM GMT (Updated: 4 Jan 2019 9:23 PM GMT)

சபரிமலையில் இலங்கை பெண் ஒருவர் தரிசனம் செய்ததாக மாறுபட்ட தகவல்கள் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

சபரிமலை,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கடந்த 2-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் சபரி மலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளும், பா.ஜனதா கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலை கர்ம சமிதி அமைப்பு நேற்று முன்தினம் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு வன்முறை வெடித்தது.

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த சசிகலா (46) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் நேற்று முன்தினம் இரவு சபரிமலைக்கு வந்தார். இருமுடிக் கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் சசிகலாவை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. எனினும் அவரது கணவரும், மகனும் சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்த சசிகலா, பம்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சபரிமலையில் பக்தர் கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனாலும் போலீசார் என்னை திருப்பி அனுப்பினர். நான் ஒரு அய்யப்ப பக்தை. 41 நாட்கள் விரதம் இருந்து வந்திருக்கும் என்னை கோவிலுக்குள் விடவில்லை. நான் யாருக்கும் பயப்படவில்லை. உங்கள் அனைவருக்கும் அய்யப்பன் பதில் தருவார்’ என்று ஆவேசமாக கூறினார்.

ஆனால் சபரிமலை சன்னிதானத்தில் சசிகலா தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சசிகலா சபரிமலை சன்னிதானத்தில், சாதாரண உடையில் இருக்கும் போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் காட்சிகளை சில தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒளிபரப்பின. இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இலங்கை பெண் சசிகலா, சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததை முதல்-மந்திரி அலுவலகம் நேற்று உறுதி செய்தது. அவர் உண்மையாகவே தரிசனம் செய்ததாக போலீசாரும் கூறினர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.

எனினும் அவர் புனிதமிக்க பதினெட்டாம்படி வழியாக ஏறிச்சென்றாரா? என்பது குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.

இதற்கிடையே சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரத்தில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு ஸ்டீல் குண்டுகள் வீசப்பட்டன.

அடூரில் உள்ள ஒரு செல்போன் கடையிலும், கண்ணூரில் 4 இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட ன.

கண்ணூரின் பா.ஜனதா அலுவலகத்துக்கு நேற்று அதிகாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தீ வைத்தனர்.

இதைப்போல பல இடங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தேறின. போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.

மாநிலம் முழுவது இருந்து இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story