ரபேல் விவகாரத்தில் நான் எழுப்பும் கேள்விகளை ‘பிரதமர் மற்றும் மந்திரிகளிடம், ஒவ்வொருவரும் கேளுங்கள்’ - ராகுல் காந்தி அறிவுறுத்தல்


ரபேல் விவகாரத்தில் நான் எழுப்பும் கேள்விகளை ‘பிரதமர் மற்றும் மந்திரிகளிடம், ஒவ்வொருவரும் கேளுங்கள்’ - ராகுல் காந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 9:24 PM GMT)

ரபேல் விவகாரத்தில் நான் எழுப்பும் கேள்விகளை பிரதமர் மற்றும் மந்திரிகளிடம் ஒவ்வொருவரும் கேட்குமாறு ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் ரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியிலும் மத்திய அரசு இருப்பதாக குற்றம் சாட்டி வரும் அந்த கட்சியினர், இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் பதிலளித்து பேசினார்.

ஆனால் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி 2 மணி நேரம் பேசினார். ஆனால் அவரிடம் நான் கேட்ட 2 சாதாரண கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை’ என்று குற்றம் கூறியுள்ளார்.

ராணுவ மந்திரியிடம் அவர் கேட்ட 2 கேள்விகள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பதிவில் இணைந்திருந்த ராகுல் காந்தி, அந்த வீடியோவை பார்த்துவிட்டு பகிருமாறும் கூறியிருந்தார். அத்துடன், அந்த கேள்விகளை ஒவ்வொரு இந்தியனும் பிரதமரிடமும், அவரது மந்திரிகளிடமும் கேட்குமாறும் வலியுறுத்தி உள்ளார்.

அதாவது, ‘ரபேல் விவகாரத்தில் இந்திய பங்குதாரர் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுத்தது யார்? ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்தபோது ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் அதிருப்தி தெரிவித்தனரா?’ ஆகிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என பதிலளிக்குமாறு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த ‘டுவிட்டர்’ பதிவை காங்கிரஸ் தொண்டர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story