ஏழைகளுக்கு வீடு பற்றி அரசு நினைக்கும்போது தங்கள் குடும்பத்தினர் பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது - பிரதமர் நரேந்திர மோடி தாக்கு


ஏழைகளுக்கு வீடு பற்றி அரசு நினைக்கும்போது தங்கள் குடும்பத்தினர் பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது - பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
x
தினத்தந்தி 5 Jan 2019 11:30 PM GMT (Updated: 5 Jan 2019 9:32 PM GMT)

ஏழைகளுக்கு வீடு கட்டுவது பற்றி அரசு நினைக்கும்போது, திட்டங்களில் உள்ள தங்கள் குடும்பத்தினர் பெயர் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் சியாங்கி விமான நிலைய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார். ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு வழங்குவதன் அடையாளமாக 5 பேருக்கு பிரதமர் வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

முந்தைய (காங்கிரஸ்) ஆட்சியிலும் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் பெயரை மாற்றும்போது அவர்கள் கோபப்பட்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் பெயரை பற்றி (இந்திரா ஆவாஸ் யோஜனா) அதிகம் கவலைப்பட்டனர். ஆனால் நான் ஏழைகளுக்கு வீடு கட்டுவது பற்றி அதிகம் கவலைப்படுகிறேன்.

அந்த பெரியவர்கள் பெயரில் வீடுகள் எங்கு கட்டப்பட்டன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதோடு அந்த வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே சென்றது என்பது பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை. இப்போது எந்த முக்கிய பிரமுகரும் பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் பெறவில்லை. ஆனால் அப்போது இந்த திட்டத்தில் பெரிய விளையாட்டே நடந்தது.

இந்த திட்டத்தில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. பணம் நேரடியாக மக்களின் வங்கி கணக்குக்கு செல்லும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வீடுகளின் தரமும் கண்காணிக்கப்படுகிறது.

வீடுகள் என்ற பெயரில் நான்கு சுவர்கள் மட்டுமே மக்கள் பெற்றுவந்த நிலையில், இப்போது வீடுகள் மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, கழிவறை ஆகிய வசதிகளுடன் கிடைக்கிறது. மக்கள் தேர்ந்தெடுக்க பல்வேறு மாதிரி வடிவங்களும் வழங்கப்படுகிறது. உள்ளூர் கட்டுமான பொருட்களுடன், புதிய வடிவங்களில், நவீன தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன.

முந்தைய ஆட்சியில் 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இப்போது 4½ ஆண்டுகளில் 5 மடங்கு அதிகமாக 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களின் பெயரிலேயே வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.

நடுத்தர மக்களின் வீடுகள் தேவைக்காகவும் வீட்டு கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களும் சொந்த வீடுகள் பெற்று வருகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Next Story