விஜய் மல்லையாவை மோடி காப்பாற்றுகிறார் என்ற காங்கிரசை இப்போது எங்கே? மத்திய அமைச்சர் கேள்வி


விஜய் மல்லையாவை மோடி காப்பாற்றுகிறார் என்ற காங்கிரசை இப்போது எங்கே? மத்திய அமைச்சர் கேள்வி
x
தினத்தந்தி 6 Jan 2019 7:41 AM GMT (Updated: 6 Jan 2019 7:41 AM GMT)

விஜய் மல்லையாவை மோடி காப்பாற்றுகிறார் என்ற காங்கிரசை இப்போது எங்கே? என்று மத்திய அமைச்சர் கேள்வியை எழுப்பியுள்ளார்.


கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா கோடிக்கணக்கில் வங்கி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் 2016–ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவர் மீது வங்கி கடன் மோசடி, சட்டவிரோத பணபரிமாற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்தது. மும்பையில் உள்ள பணபரிவர்த்தனை தடுப்பு சட்ட தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் ஒரு மனு தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டப்படி தற்போது லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு விஜய் மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். நீண்ட விவாதத்துக்கு பின்னர் தனிக்கோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி, மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்தார்.

இதன்மூலம் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் என்ற புதிய சட்டத்தின்கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முதல் வர்த்தக பிரமுகர் விஜய் மல்லையா தான். இந்த புதிய சட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் மூலம் தப்பி ஓடிய குற்றவாளிகளின் சொத்துகளை அரசு கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை தனிக்கோர்ட்டு விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்ததை பா.ஜனதா வரவேற்றது.  பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறும்போது, ‘‘இது மிகப்பெரிய வெற்றி. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மகுடத்தில் மேலும் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. மல்லையாவுக்கு மிகப்பெரிய தொகையை வழக்கமான உத்தரவாதம் கூட இல்லாமல் கடனாக வழங்கியதற்கு காங்கிரஸ் அரசு ஊக்கம் அளித்தது’’ என்றார்.

காங்கிரசுக்கு கேள்வி

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், “விஜய் மல்லையாவை மோடி அரசு காப்பாற்றுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது, இப்போது அவர்களை எங்கே? எந்தவொரு பகுதியிலும் நடக்கும் நேர்மறையான நகர்வை  காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும்,” என்று கூறியுள்ளார். 

Next Story