கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்


கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது -  அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 11 Jan 2019 4:19 PM GMT (Updated: 11 Jan 2019 4:19 PM GMT)

கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. 

இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கெடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது. 

இவ்விவகாரத்தில் குற்றவாளி என கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான  கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் பரிதாபமாக இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பின்னார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். 

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள  வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக  கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,  இவ்விவகாரத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள எண்ணாமல், மத்திய அரசு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள்நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியானதகவல்கள் அனைத்தும் கற்பனையே.  கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன?  காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது என கூறினார்.

Next Story