பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்


பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:42 AM GMT (Updated: 14 Jan 2019 4:42 AM GMT)

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குஜராத்தில் இன்று அமல்படுத்தப்படுகிறது.

அகமதாபாத்,

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன் தினம் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். இதைதொடர்ந்து, அவரது ஓப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் (Gazette Notification) வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டம், குஜராத் மாநிலத்தில் திங்கள்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை, பொதுப் பிரிவில் இருக்கும் ஏழைகளுக்கு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், குஜராத்தில் 14-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும். வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கை தொடர்பாக 14-ஆம் தேதிக்கு முன்பு வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். 

இத்தகைய விவகாரங்களில், தேவைப்பட்டால் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கை தொடர்பாக புதிய விளம்பரங்கள் வெளியிடப்படும். அதேநேரத்தில், வேலைவாய்ப்புகள் தொடர்பான நேர்முகத் தேர்வு, கல்வி நிலையங்களில் சேர்க்கை தொடர்பான தேர்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டிருப்பின், இந்த உத்தரவு பொருந்தாது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் விமர்சனம்: இதனிடையே, 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான குஜராத் பாஜக அரசின் முடிவை அந்த மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 


Next Story