ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


ஒடிசா விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2019 12:54 PM GMT (Updated: 14 Jan 2019 12:54 PM GMT)

ஒடிசாவில் பள்ளி கூட விடுதியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடி என்னும் இடத்தில் மாநில பழங்குடியினர் மற்றும் கிராம மேம்பாட்டு இலாகாவின் சார்பில் உயர் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியின் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  இதை தொடர்ந்து விடுதி நிர்வாகிகள் அந்த மாணவியை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவியின் உடல் நிலை சீராக இருப்பதாக கந்தமால் மாவட்ட நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுதியின் 2 தாதி, 2 சமையலர்கள், பெண் மேற்பார்வையாளர், உதவி நர்சு ஆகிய 6 பேரை பணியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு மாணவியும், குழந்தையும் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கு குழந்தை இறந்து விட்டது.  தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவரது நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து பள்ளி கூட தலைமையாசிரியை ராதாராணி தலேய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.  அந்த பள்ளி கூடத்தின் 3 உதவி சூப்பிரெண்டுகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஷ்ரபன் பிரதான் என்ற 3ம் வருட கல்லூரி மாணவனை நேற்று போலீசார் கைது செய்துள்ளளனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற அந்த மாணவியை ஷ்ரபன் கற்பழித்து உள்ளான் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story