‘ஜனநாயகமே இந்தியாவின் பலம்’ ராகுல் காந்தி நெகிழ்ச்சி


‘ஜனநாயகமே இந்தியாவின் பலம்’ ராகுல் காந்தி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 2019-01-17T03:14:25+05:30)

ஜனநாயகமே இந்தியாவின் பலம் என்று ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் ஒருமுறை இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தவாறு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். வெளிநாட்டு எம்.பி.க்கள் முன்னிலையில் இப்படி கோ‌ஷமிடுகிறார்களே? இன்று ஒருநாளாவது அமைதியாக சபையை நடத்தியிருக்கக்கூடாதா? என்று எண்ணினேன்.

பின்னர் ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன். அப்போது ஒரு எம்.பி. அழத்தொடங்கினார். ஏன் என்று கேட்டபோது, உங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த வாதங்கள் எங்கள் நாட்டில் நடந்திருந்தால், அது துப்பாக்கியுடன்தான் நடந்தேறியிருக்கும் என்று சோகத்துடன் கூறினார்.

நமது ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம். அதை எந்த விலை கொடுத்தாவது நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story