பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு


பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு
x
தினத்தந்தி 18 Jan 2019 7:25 AM GMT (Updated: 18 Jan 2019 7:25 AM GMT)

பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

லக்னோ

விருமாண்டி, சீவலப்பேரி பாண்டி என கடா மீசையுடன் வலம் வர விரும்பும் ஆண்கள்தான் தமிழகத்தில் அதிகம்.

ஆணுக்கு அழகு மீசை என்பார்கள். ஒவ்வொரு ஸ்டைலில் மீசை வைப்பது அவ்வப்போது டிரெண்டாக இருக்கும். ஆனால் போலீஸ்காரர்கள், மீசையை திருக்கி விட்டிருப்பதுதான் அதிகம். அதை கம்பீரம் என்று நினைப்பார்கள். போலீஸ்காரர்களுக்கு அதுபோன்ற மீசை தேவை என்றும் சொல்வார்கள். 

தமிழ் சினிமா காட்டியிருக்கிற போலீஸ் கேரக்டர்கள் எல்லாமே பெரிய மீசை வைத்திருக்கும். பழைய தங்கப்பதக்கம் படத்தில் இருந்து தற்போதைய சிங்கம் வரை பெரிய மீசைதான் போலீஸ்காரர்களின் அடையாளம். உத்தரபிரதேச காவல்துறை, போலீஸ்காரர்களுக்கு மீசை படி (அலவன்ஸ்) வழங்கி வருகிறது. இந்த படியை, ரூ. 50-ல் இருந்து ரூ.250 ஆக மாற்ற இப்போது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதுபற்றி உத்தரபிரதேச மாநில போலீஸ் ஏடிஜி பினோத் குமார் சிங் கூறும்போது, முன் காலத்தில் போலீஸ் என்றால் பெரிய மீசை வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. இருந்தாலும் சிலர் பெரிய மீசை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய ஸ்டைலை பின்பற்ற வேண்டும் என்று மீசை படியாக, ரூ.50 வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதை மாற்றி ரூ.250 ஆக உயர்த்தி தர உள்ளோம். அதோடு மீசையையும் கம்பீரமாக வளர்க்க ஆலோசனையும் கூறியுள்ளோம்.

மீசை வளர்ப்பதும் வளர்க்காமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், மீசை ஒருவரது ஆளுமையை அதிகரிக்கும். குறிப்பாக போலீஸ்காரரின் ஆளுமையை அது அதிகரித்து காட்டும் என்றார்.

மீசை அலவன்ஸ் பற்றி ஓய்வுபெற்ற அம்மாநில எஸ்.பி, ஹர்பால் சிங் கூறும்போது, பிரிட்டீஸ் காலத்தில் இருந்தே, போலீஸ்காரர்கள் பெரிய மீசையுடன் இருப்பதுதான் வழக்கம். அதுதான் பெருமை. அதன் பிறகு இந்த டிரெண்ட் குறைந்துவிட்டது.

Next Story