ரபேல் விவகாரத்தில் மனோகர் பாரிக்கரை கண்டு மோடி அச்சம் கொள்கிறார் - ராகுல் காந்தி


ரபேல் விவகாரத்தில் மனோகர் பாரிக்கரை கண்டு மோடி அச்சம் கொள்கிறார் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 30 Jan 2019 1:25 PM GMT (Updated: 30 Jan 2019 1:25 PM GMT)

பிரதமர் மோடி ரபேல் விவகாரத்தில் மனோகர் பாரிக்கரை கண்டு அச்சம் கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என கூறும் காங்கிரஸ் இதுதொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணையை கோருகிறது. மறுபுறம் பா.ஜனதா மறுக்கிறது. இவ்விவகாரத்தில் மோதல் தொடரும் நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரையாற்றுகையில் ரபேல் விவகாரம் தொடர்பாக பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் ரபேல் போர் விமானம் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் உள்ளது. எனவே, மனோகர் பாரிக்கரை கண்டு மோடி அச்சம் கொள்கிறார்.  அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தத்தை பறித்து தன்னுடைய பணக்கார நண்பரான அம்பானியிடம் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி இளைஞர்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் கோடியை எடுத்து அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார். அம்பானிக்கு கொடுக்கும் போது விவசாயிகளுக்கு ஏன் கொடுக்க கூடாது என கேள்வியை எழுப்புகிறோம். நாங்கள் விவசாயிகளுக்கு நீதியை கேட்கிறோம்.

பிரதமர் மோடிக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பிடிக்கவில்லை. எனவே, அவற்றை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அகற்றி விட்டார். பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக அனைவரும் போரிட வேண்டும் என்று கூறினார். எனவே மக்கள் அனைவரும் வரிசையில் நின்றனர். தேசம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். எனவே, துடைப்பத்தை கொடுத்தார். அனில் அம்பானியிடம் துடைப்பத்தை கொடுத்து இந்த தேசத்தை சுத்தம் செய்ய கேட்காதது ஏன்?. பாரதீய ஜனதா அரசு கடந்த 5 ஆண்டுகளில் தேசத்தை பிரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டினார். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

மனோகர் பாரிக்கர் மறுப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கோவா மாநில முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கரை சந்தித்து பேசினார்.  பின்னர் பேசுகையில், “ரபேல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று மனோகர் பாரிக்கர் கூறினார்” என்று குறிப்பிட்டார். இதனை மனோகர் பாரிக்கர் மறுத்துள்ளார். “ உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சந்திப்பை பயன்படுத்திக் கொண்டீர்கள் என்பதை நினைக்கும்போது நான் வருத்தம் அடைகிறேன். என்னை சந்தித்த 5 நிமிடங்களில் ரபேல் குறித்து உங்களுடன் எதுவும் பேசவில்லை”என மனோகர் பாரிக்கர் பதிலளித்துள்ளார். 


Next Story